Tuesday, May 3, 2011

பின்லேடன் படம் போலி : கார்டியன் பத்திரிகை உறுதி


வாஷிங்டன், மே 3 பின்லேடன் இறந்ததாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட புகைப்படங்கள் போலி என சில செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் இறந்த நிலையில் காட்டப்பட்ட புகைப்படத்தின் கீழ்பகுதி அவரது உண்மையான புகைப்படம் என்றும் மேல்பகுதி மற்றொரு சடலத்தின் புகைப்படமாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ராணுவ நடவடிக்கையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின்போது தெரிவித்திருந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பின்லேடனின் இறந்ததாக வெளியிடப்பட்ட புகைப்படம் போலி என செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்த புகைப்படங்கள் முதலில் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்தது.

அந்தப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பின்லாடனின் குண்டு பாய்ந்த முகம் என்று பாகிஸ்தான் இணையதளம் வெளியிட்ட படத்தை, அனைத்து ஊடகங்களும் எடுத்துக் கொண்ட கொஞ்ச நேரத்தில், அந்த படத்தில் உண்மையில்லை; இரண்டு வருடத்திற்கு முன் இறந்த ஒருவரின் முகத்தோடு 'மார்பிங்' முறையில் உருவாக்கிய படமே இது என்று, அதற்கான ஆதாரத்துடன், லண்டனில் இருந்து வெளியாகும், 'கார்டியன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. புகைப்பட ஆதாரத்துடன் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: