Tuesday, July 12, 2011

பூர்வ ஜென்மத்தைப் புடம்போட்டுக் காட்டும் தெலுங்குத் திரைப்படம் "மஹதீரா''


- முஹம்மட் பிறவ்ஸ்
தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜின் அறிமுகப் படம்தான் "மஹதீரா'. தமிழில் "மாவீரன்'' என்றும் மலையாளத்தில் "தீரா'' என்றும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களின் பின்னர் மறு ஜென்மம் எடுத்து நிறைவேறுகின்றது. இதுவே மஹதீராவின் கதைக்கரு.

ராஜவம்சத்தில் பிறந்த மித்ராவுக்கும் (காஜல் அகவர்வால்) அந்நாட்டின் படைத் தளபதியான பார்த்திபனுக்கும் (ராம்சரண்) இடையே காதல் ஏற்பட, இந்த காதலுக்கு வில்லனாக வருகிறார் காஜல் அகர்வாலின் மாமனா ரணவிரு (தேவ்கில்). இவரது வில்லத்தனத்தால் சிதைந்துபோன காதல் ஜோடிகள் 400 ஆண்டுகள் கழித்து மறுபிறவி எடுக்கிறார்கள். இந்த ஜென்மத்திலயாவது இவர்கள் ஒன்று சேர்வார்களா என்றால், இங்கேயும் வில்லனாக மறுபிறவி எடுக்கும் தேவ்கில் இவர்களது காதலுக்கு முட்டுகட்டையாக இருக்கிறான். இந்த சிக்கலைத் தீர்த்து எப்படிக் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இப்போது ரசிகர்கள் வாயைப் பிளந்துகொண்டு பிரமாண்டத்தையே ரசிப்பதை நன்றாகப் புரிந்துகொண்டு தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. கி.பி. 1600இல் மாவீரனாக இருந்த பார்த்திபனுக்கும் 400 வருடங்களின் பின்னருள்ள ஹர்ஷாவுக்கு முடிச்சுப்போட்டுக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கதாநாயகன் ராம் சரண்தேஜ் (ஹர்ஷா) சீறிப்பாயும் மோட்டார் பைக்மூலம் அறிமுகத்தில் கலக்குகிறார். உயரம் தாண்டும் பந்தயத்தில் தாண்டவேண்டிய 30 அடி உயரத்தை 35 அடியாக உயர்த்தும்போது மோட்டார் சைக்கிளைக் கீழை விட்டுவிட்டு தாவி உயரத்தை தாண்டிவிட்டு தாண்டும் மோட்டார் சைக்கிளில் தாவிப் பிடித்துக்கொள்ளும் காட்சி எம்மை அறியாமலேயே கைதட்ட வைக்கிறது.

பந்தயக்காரியாக வரும் முமைத்கானுடன் சேர்ந்து போடும் குத்தாட்டத்தில் கமெராவும் கிராபிக்ஸும் சேர்ந்து விளையாடியிருக்கிறது. பாடலுக்கான இடங்கள் சூப்பர். எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான காட்சியமைப்பை கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும். ராம்சரணின் ஆட்டணிம் அசத்தல். ஆட்டோவில் செல்லுகையில் காஜலின் கையைத் தொடும்போது "ஷாக்'' அடித்து பூர்வ ஜென்மம் நினைவுக்கு வருகிறது. பின்னர் அவளைக் காதலிப்பதாக காஜலிடமே உதவிகேட்டும் போது ராம்சரணை அலையவைக்கும் காட்சியும் கதாநாயகனின் நளினமும் ரசிக்கக்கூடிய வண்ணம் இருக்கின்றது.

மரகதமணியின் பிண்ணனி இசை பல இடங்களில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. தீர... தீர... பாடலின் ஹம்பிங் மெய்மறக்க வைக்கிறது. இப்பாடலில் கமெராவின் உச்ச பயனைக் காட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பாடல் வரிகளை எழுதிய வாலியும் ஜெயராணிம் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தில் காஜல் அகர்வால் உச்ச அழகோடு காட்டியிருக்கிறார்கள். அவருடைய இளவரசி பாத்திரம் படத்துக்கு உயிரூட்டுகிறது. கலை இயக்குநர் எஸ்.ரவிந்தரின் கைவண்ணத்தில் பிரமாண்டமான செட்கள் போடப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கும் எடிட்டிங் செய்த வெங்கடேஸ்வராக்கும் ஒரு ஓ... போடலாம்.

கால பைரவனின் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள இடம் ஹொலிவூட் உலகையே நம் கண்ணின்னாடி கொண்டு வருகின்றது. பார்ப்பவர்களுக்கே அச்சம் வருமளவுக்கு அந்தரத்தில் அந்த இடம் இருப்பது அதிரசணை. அவ்விடத்தில் 100 பேர்களைக் கொன்று குவிக்கும் வீரத்தின்மூலம் தான் ஒரு மாவீரன் என்பதை நியாயப்படுத்தியிருக்கிறார் கதாநாயகன்.
காஜலை வில்லன் கடத்திச் செல்லும்போது உயரமான கூரையிலிருந்து ஹெலியைத் தாவிப்பிடிப்பது மெய்ச்சிலிர்க்கும் காட்சி.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. கையைத் தொடும்போது கதாநாயகனுக்கு மட்டும் ஏன் "ஷாக்'' அடிக்கவேண்டும்? கதாநாயகிக்கு ஏன் பெண்ணின் ஜென்மம் நினைவுக்கு வரவில்லை? இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கொடுக்கவில்லை". காதலனே தனது அப்பாவைக் கொன்றதாக நம்பும் காஜலுக்கு இறுதிவரைக்கும் யார் உண்மையான கொலையாளி என்பதை கதாநாயகன் நிரூபிக்கவே இல்லை". அப்படியானால் கொலைகாரனுடன் அவள் எப்படி ஐக்கியமானாள்...?

புராதனக் கதையில் எதிரிகளின் முஸ்லிம் படைத்தலைவரான "சேர்க்கான்'' பார்த்திபன் செத்து கீழே விழும்பொழுது, "நீ காதலில் ஜெயிக்க மீண்டும் பிறப்பாயடா...'' என்று உரக்கக் கூறுகிறார். முஸ்லிம்கள் மறுபிறப்பை நம்புவதில்லையென்று இந்தக் கதாசியருக்குத் தெரியாதா... என்ன?

ஆகமொத்தத்தில் மறுபிறப்பு உண்டென்றும் சிலை ஆசைகள் அதிலேயே நிறைவேறுகின்றன என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். புராதனக் கதைக்கும் நவீன கதைக்கும் மறுபிறப்பு என்றொரு முடிச்சுப்போட்டு அதை நவீனத்துவத்துடன் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார் மஹதீராவில்.

தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் மூடநம்பிக்கை, சாஸ்திரம் போன்றில்தான் அதிகமாகத் தொக்கி நிற்கின்றன. விஞ்ஞானத்துக்கே சவால்விடும் இக்கால கட்டத்தில் புராதனக் கதைகளையே திரைப்படமாக்கி எதனைச் சாதிக்க நினைக்கின்றது இத்திரையுலகம்? இதைவிடுத்து சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களையும் கவனத்திற் கொள்வது நன்று.
மூதாதையர்களின் நம்பிக்கைகளை அடியொற்றிப் பின்பற்றும் மக்களுக்கு நல்லதொரு திரைப்படம்.

இவ்வுலகில் உங்களுக்கு விடிவு கிட்டாவிட்டால் மறுபிறவியிலாவது கிட்டும் என்றும் இப்படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளளும்.

3 comments:

Firows said...

நன்றி: இருக்கிறம்

Anonymous said...

thanks.superb

Anonymous said...

superb