Tuesday, June 7, 2011

''முகப்புத்தகம்'' - பேஸ்புக்கில் காதல்


- முஹம்மட் பிறவ்ஸ் -

தியேட்டருக்குப்போய் படம்பார்த்த காலம்போய் இப்பொழுது முழுக்கமுழுக்க யூடியூப்பயே நம்பி எடுக்கப்பட்ட குறும்படம்தான் "முகப்புத்தகம்'. அட்லியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்து தற்போதுது யூடியூப்பில் சக்கை போடுகிறது இந்த 20 நிமிடக் குறும்படம்.
விஜய் ரீ.வி.யின் `கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சியின் வெற்றி நாயகன் சிவகார்த்திகேயன், எம்.சதீஸ், சூர்யா பாலகுமாரன் மற்றும் இவர்களுடன் நான் கடவுள், உத்தம புத்திரன் ஆகிய திரைப்படங்களில் நடித்த ராஜேந்திரனும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கதை, வசனம்-சூர்யா பாலகுமாரன், பிரியா மதன், இசை-நந்தா, பாடல்-நவீன், கமெரா-ஜோர்ர்ஜ் சி.வில்லியம்ஸ்.

இக்காலத்தில் இளைஞர், யுவதிகள் சதா எந்நேரமும் அரட்டையடித்துக்கொண்டிருக்கும் பேஸ்புக்கின் மறுமுகத்தை புடம்போட்டுக் காட்டுவதே இக்குறும்படம். போலியான பெண்களின் பேஸ்புக் கணக்கினால் ஏமாற்றப்படும் ஆண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்று பலகோணங்களில் சொல்லியிருக்கிறார் அட்லி இந்த முகப்புத்தகத்தினூடாக.

பேஸ்புக்கில் முகம்தெரியாமல் பழகிய தனது காதலியான புஜ்ஜுவை சந்திக்க தனியாகவரும் முரளிக்கு அவளை(ன)க் கண்டதும் பேரிடி விழுகிறது. கொரியா நாட்டு செல்போனில் பெண் குரலில் பேசி, அவனை ஏமாற்றி அடித்துக் கொன்றுவிட்டு முரளியின் உடமைகளை கொள்ளையடித்துச் செல்கிறான் சதீஸ் எனும் ஏமாற்றுப் பேர்வழி.

"டீக்கடைப் பருவம்... நுனி மீசை உருவம்...' பாடல் சினிமாப் பாடல்போல் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. நந்தாவின் பின்னணி இசை பாடலில் மட்டுமல்லாது பட இடங்களிலும் பேசியிருக்கிறது. ஜோர்ஜ் சி.வில்லியம்ஸின் கமெரா பல கோணங்களில் மௌன வார்த்தைகளால் பேசியிருக்கின்றது. கூடைப்பந்து விளையாடும்@பாது "இது புது வோல், கீழே விழுந்தால் மண் ஒட்டிவிடும், அப்பா திட்டுவார்' என்பதெல்லாம் ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமான ஜோக். மொட்டை மாடியில் வீட்டுக்கார அம்மாவுடன் கடலைபோட்டுக்கொண்டு பாட்டுக்கு "சிக்னல்' கொடுப்பது தேவையே இல்லாத காட்சி. அந்த இடத்தில் காரணமில்லாமல் குட்டையைக் குழப்பியிருக்கிறார் கதாசிரியர்.

ஜீவாவுக்கு (கார்த்திகேயனுக்கு) பேஸ்புக் மூலம் அறிமுகமான ஆர்த்தியுடனான காதல் செல்போன்வரை செல்கின்றது. ஆர்த்தி மின்னஞ்சலில் அனுப்பிய அவளது படத்தைப் பார்க்கவரும் நண்பர்களின் ஆர்வம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் அனுப்பியது ஹொலிவூட் நடிகை "அஞ்சலீனா ஜோலி'யின் புகைப்படம் என்பது தெரிந்ததும் ஜீவாவின் முகத்தில் ஈயாடுவதையும் நண்பர்கள் கிண்டலடிப்பதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஜீவா தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
அதற்காக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு மதுவருந்தி மாறிமாறி தங்களுக்கள் கிண்டலடிப்பது பார்வையாளர்களைக் கடுப்பேற்றுகிறது. இக்காட்சி ரொம்ப ஓவரான அலட்டல்.

அந்நேரத்தில் ஆர்த்தி ஜீவாவை நேரடியா சந்திக்கவரும்படி அழைக்கிறாள். 'ஆண்டவன்' எனும் ராஜேந்திரன் தனது அடியாட்களுடன் ஜீவானின் பாதுகாப்புக்காக அவ்விடத்தில் பதுங்கியிருக்கின்றனர். கண்தெரியாத ஆர்த்தியின் அறிமுகத்தில் நிலைதடுமாறிப் போகிறான் ஜீவா. அந்நேரத்தில் ஆர்த்தி "பேஸ்புக்கில்' தனது காதலை வெளிப்படுத்தியதாகச் சொல்லும்போது, ராஜேந்திரன் பேஸ்புக்கை, பிஸிக்ஸ் புக் என்று நினைத்து அந்தப் பொண்ணுக்கிட்ட வாங்கின "பிஸிக்ஸ் புக்கை' திருப்பிக் கொடுக்கச் சொல்லும்போது, விழுந்து விழுந்துதான் சிரிக்கவேண்டும்.

கண்தெரியாமல் எப்படி 'பேஸ்புக்' பயன்படுத்த முடியும் என்ற எமது கேள்வி ஜீவாவின் கேள்வியாக ஆர்த்தியின் காதில் ஒலிக்க, அடுத்த நிமிடமே ஆர்த்தியிடமிருந்து பதில் வருகிறது. "JAWS" எனும் மென்பொருள் மூலமாக பயன்படுத்துவதென்றும் இதுவரை பேஸ்புக்கில் 834 பார்வையற்ற பயனர்கள் இருக்கிறார்கள்' என்றும் நமக்கு தெரியாத ஒரு பொது விடயத்தை கதைக்குள் புகுத்தியிருக்கும் கதாசிரியரைப் பாராட்டலாம்.

ஜீவா ஆர்த்தியுடன் சேர்ந்தாரா? இல்லையா என்பதே மீதிக்கதை. நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுக்கும்@பாது, ஒருவர் 'கோழிக்கும் கண் தெரியணும்; குழம்பும் ருசியா இருக்கணும்' எனும் வசனம் எல்லோரையும் கவருகின்றது. நண்பர்களின் பேச்சைக்கேட்டு முடிவெடுக்கும் ஜீவா, மாற்றமாக ஆர்த்தியுடன் கைகோர்ப்பதில் தனது காதலின் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முரளி, ஜீவா மற்றும் கடைசியில்வரும் ஒருவரும் பேஸ்புக்கில் அறிமுகமான தனது காதலிக்கு செல்போனில் அழைப்பை மேற்கொள்ளும்போது எல்லோருக்கும் "முன்பே வா... அன்பே வா...' எனும் ரிங்கிங் டோன் கேட்கும்போது, ஒரே ஆள்தான் பல ஆண்களை ஏமாற்றிப் பிழைக்கிறார் என்பதைச் சொல்லி முடித்திருக்கிறார் அட்லி.

ஆண்டவனாக வரும் ராஜேந்திரன் 'அந்த ஆண்டவன் உங்களை கைவிட்டாலும் இந்த ஆண்டவன் கைவிடமாட்டான்' எனும் வசனம் எல்லோரும் ரசிக்கும் வண்ணமுள்ளது. இலாபத்தை எதிர்பார்க்கமால் பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களை மக்களுக்குச் சொல்லியிருக்கிறது "முகப்புத்தகம்'' எனும் இக்குறும்படம். பேஸ்புக்கில் அவர்கள் அறிமுகமாகும் காட்சியையும் காட்டியிருந்தால் இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். ராஜேந்திரன் வில்லனா? காமெடியனா என யோசிக்கத் தூண்டுகிறது. சிவகார்த்திகேயன் இன்னும் முயற்சித்தால் சினிமாவுக்குள் நுழையலாம். இது அதற்கான ஒரு அத்திவாரமாகக்கூட இருக்கலாம். இவ்வாறான சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை நாம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.

இப்போது இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் அலுவலகம் தொட்டு பேஸ்புக்கிலேயே தொங்கிக்கொண்டு தங்களது நேரத்தைப் போக்குகின்றனர். அதில் தங்களது சுயவிபரங்களைப் பகிர்வதும் தொலைபேசி மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதும் எவ்வளவு பாரதூரமானது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன் பெண்களின் பெயர்களில் போலியான கணக்குகள் பேஸ்புக்கில் இருப்தையும் "முகப்புத்தகம்'' சுட்டிக்காட்டத்தவறவில்லை.

எது எப்படியிருப்பினும் நம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியாதவர்களிடம் சுயவிபரங்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக்கையாக இருப்பது வருமுன் காக்க உதவும்.
முகப்புத்தகம்-பேஸ்புக்கில் புரட்டப்படாத காதல் பக்கங்கள்.

நன்றி: இருக்கிறம் (30.05.2011)


2 comments:

Firows said...

நன்றி: இருக்கிறம் சஞ்சிகை (30.05.2011)

ஊடகத்தேடல் said...

உண்மைலேயே நல்ல தொரு திரை விமர்சனம் ...
வாழ்த்துக்கள் FIROWS...!