Wednesday, May 4, 2011

பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட விதம் ஷரியா சட்டத்தை மீறிய செயற்பாடு


அல்ஹைடாவின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலை கடலுக்குள் அடக்கம் செய்வதென அமெரிக்கா மேற்கொண்டிருந்த தீர்மானமானது ஷரியா சட்டத்தை மீறுவதாக

அமைந்துள்ளதாக முஸ்லிம் கல்விமான்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான கார்ள் வின்சனிலிருந்து ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் ஷரியா சட்டத்தை மீறியுள்ளதாக விமர்சித்துள்ள முஸ்லிம் கல்விமான்கள் அமெரிக்க நிலைகளுக்கு எதிரான பழிவாங்கல் தாக்குதல்களை இந்த விடயம் தூண்டுவதாக அமையுமென எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, ஏனைய சிலர் கடலில் அடக்கம் செய்த விடயம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். அதாவது இந்த விடயம் கேள்விக்குரியதொன்றாக இருப்பதாகவும் அவர் இறந்தாரா? இல்லையா? என்பது பற்றிய கேள்வியை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஒசாமாவின் உடல் தொடர்பான உண்மையான புகைப்படங்கள் வெளியிடப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்கள் பலரிடமிருந்து பெற்றுக்கொண்ட மரபணுக்களைப் பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த உடல் பின்லேடனுடையதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

பின்லேடனின் உடல் சிதைவடைந்திருந்ததால் 24 மணிநேரத்துக்குள் அதனை அடக்கம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி கடலுக்குள் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கடந்த காலத்திலும் 24 மணித்தியாலத்துக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்ற விதிமுறை எப்போதுமே கடைப்பிடிக்கப்பட்ட விடயமாக இருந்ததில்லை. உதாரணமாக ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் மகன்மாரான உதே,குவாஷே ஆகியோரின் உடல்கள் பதனப்படுத்தப்பட்டு 11 நாட்களுக்கு வைக்கப்பட்டது . அமெரிக்கப் படையினர் அவர்களைக் கொன்ற 11 நாட்களுக்குப் பின்னரே உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஹுசைனின் மகன்மாரின் உடல்கள் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்பட்டிருந்தன.

கொல்லப்பட்ட பின்னரான பின்லேடனின் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிடுமா? என்பது தெளிவற்றதாகவுள்ளது. ஒசாமாவின் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தமை இந்த விடயத்தை நம்பாதவர்களின் நோக்கத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்குமென்று வடக்கு இலியோனிஸ் பல்கலைக்கழக உளவியலாளர் பிராட் ஷாகன் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பராக் ஒபாமா அமெரிக்கப் பிரஜையாகவிருப்பதை நம்ப மறுப்பவர்களும் இருக்கின்றதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் குறித்து பாகிஸ்தானில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. உண்மையிலேயே பின்லேடன் இறந்துவிட்டாரென்பதை நம்புவதற்குப் பலர் விரும்பவில்லை.

நாம் பின்லேடன் இங்கிருந்தார் என்பதை நம்பவில்லையென அபோட்டாபாத்தில் உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஹரிஸ் ரஸீத் என்பவர் கூறினார். ஒருவருக்கும் தெரியாமல் அவர் எவ்வாறு இங்கு வந்திருக்க முடியும்? ஏன் அவரை இவ்வளவு விரைவாக அடக்கம் செய்தனர்? இந்த விடயமானது மோசடியான நாடகமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஒசாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்திருந்தால் அந்த உடல் மீனிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமிற்கு இணங்க தாங்கள் இதனைச் செய்ததாக அவர்கள் உரிமைகோர முடியாது. கடலுக்குள் அடியிலேயே உடலை அடக்கம் செய்திருக்க வேண்டுமென்று ரியாத்தில் ஷரியா சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சௌத் அல் ஹனிசன் கூறியுள்ளார்.

No comments: