Monday, May 30, 2011

ஒரு படைப்பாளனாக நான் படைத்த பல்வேறு ஓவியங்கள் என் ஆத்ம வேதனைகளை அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.




ஓவியக் கலைஞரும் ஆசிரியருமான முஸ்தபா அரபாத்

நேர்காணல்: முஹம்மட் பிறவ்ஸ்


உணர்ச்சிகளை அழகிய தன்மையோடு உருவாக்கி வெளிப்படுத்தும் காட்சி மொழி தான் ஓவியம். இந்த ஆற்றல் எல்லோருக்கும் அமைவதில்லை. அது இறைவன் ஒரு சிலருக்கு வழங்கியுள்ள அரும் கொடை. எந்தவொரு படைப்பையும் ஓவியமாக காட்டும்போது அதன் தாக்கமும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அவ்வளவு ஏன்? நம்நாட்டில் நடைபெற்ற யுத்தம் அதனால் ஏற்பட்ட தாக்கங்களை நீங்கள் பத்திரிகைகளில் வாசிக்கும்போது ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும். அதையே நீங்கள் ஓவியங்கள் மூலம் காணும்போது சற்று அதிகமாக எதையோ ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். அதுதான் ஓவியங்களின் வலிமை. எந்தவொரு கலையும் பிறக்கும் போது வருவதில்லை. எந்த மனிதனும் பிறவியிலே கலைஞனாப் பிறப்பதில்லை. அவனது ஆர்வமும் இடையறாப் பயிற்சியுமே அவனை கலைஞனாக மாற்றுகிறது. நவீன ஓவியர்களுள் ஓவியக் கலையை முறையாகப் பயின்று ஓவியம் தீட்டுபவர்களும் உள்ளனர்;. தாமே கற்று ஓவியம் வரைபவர்களும் உள்ளனர். மேலும் மரபு சார்ந்த ஓவியர்களும் மரபு சாரா ஓவியர்களும் உள்ளனர். அவற்றுள், தானே ஓவியம் வரைந்து கற்றுக்கொண்ட ஒரு ஓவியர்தான்; சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் முஸ்தபா அரபாத். கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியை கற்ற இவர் அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஓவியத்துறையில் விசேட பயிற்சியை முடித்துள்ளார்.

சிறுவயதுக் காலங்களில் தான் பார்த்தவற்றையும் பத்திரிகைகளில் வரும் படங்களையும் பார்த்து வரைந்து பழகியவர் இன்று சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில ஓவியக் கலை ஆசிரியராக பணியாற்றுகிறார். பல்வேறு ஓவியக் கண்காட்சிகளை நடத்திய இவரது பல சித்திரங்கள் ஜனனி மித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இருக்கிறமுக்காக இவரை அண்மையில் சந்தித்தபோது இவர் ஆசிரியரா மாணவரா என்று சற்று தடுமாறித்தான் போனேன். வயதுக்கு மீறிய அவரது படைப்புக்களைப் பார்த்து என்னால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஓவியம் வரைவதற்கான ஆர்வம் ஏற்பட்டது பற்றிக் கேட்டேன்.

'சின்ன வயசில இருந்தே கலைகளில் ஆர்வம். ஓய்வு நேரங்கங்கல்ல எதையாவது வரைஞ்சுக்கிட்டு இருப்பன். எனக்கு பொழுது போக்கே எதையாவது வரைந்து கொண்டு இருக்கிறதுதான். வாப்பா இல்லாத டைமிலதான் அதிகமா வரையிறது. ஏனெண்டால் நான் படிக்கணும் எண்டு சொல்லி வரைய விடுறதில்ல. அவர் வீட்ல இல்லாத டைம்ல நான் வரையிற. பாடசாலைக்குப் போறத்துக்கு முன்ன இருந்தே வரைய தொடங்கிட்டன். நான் வரையிறதுக்கு என்னோட நண்பர்கள் தான் உறுதுணையா இருந்தாங்க. சிறுவயதில காட்டூன் வரையிறதில ஆர்வம் இருந்தது. கல்லூரி காலங்கள்ல சிரேஸ்ட மாணவர்களை காட்டூனா வரைந்து அடிவாங்கியிருக்கன்..' என்றவர் தான் வரைந்த ஓவியம் முதன் முதலாக 'அகரம்;' என்ற சஞ்சிகையில் வெளிவந்ததாக கூறி மகிழ்ந்தார்.

'சித்திரத்தில வந்து பொதுவா நாலு வகை இருக்கு. 'சத்தியம்' எண்டு சொல்றது இயற்கையானதில வரையிறது. அடுத்தது வைணிகம். அது இசைப் பண்பு நிறைந்தது. அடுத்தது நாகரம். நாகரம் எண்டு சொல்றது நாகரிகத்தை உடையதாக இருக்கும். நான்காவது நிக்கிரம். இது கலப்புடையது. தொன்மைக் காலத்தில விஷ்ணு தர்மோத்திரம் என்கிற தொன்மையான ஓவிய நூலில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே வகைகள்தான் இப்பவும் இருக்குது' என்றார்.

உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களையும் இயற்கையைப் பிரதிபலிக்கின்ற ஓவியங்களையும்தான் இவர் விரும்பி வரைவாராம். தான் வரைந்த ஓவியங்களில் மனித மரங்கள் என்ற ஒரு சித்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார். அதிகமாக நாட்டிலும் வீட்டிலும் நடக்கும் பிரச்சினைகளை தத்ரூபமாக தன் கைவண்ணத்தில் ஓவியமாக தீட்டியிருந்த அவரது சில ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே ஓவியம் வரைவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கின்றதா என்று கேட்டேன்.
'நான் கல்விக் கல்லூரிக்கு சென்ற போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் வரைவாங்க. அவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சது. சிலவங்க புள்ளிகளைப் பயன்படுத்தி வரைவாங்க. சிலர் வர்ணங்களை மிகவும் அடர்த்தியா பயன்படுத்துவாங்க. மற்றது வர்ணங்கள்ல நீர்த்தன்மையானத பயன்படுத்துவாங்க. சிலர் கோடுகளைப் பயன்படுத்தி வரைவாங்க. இப்படி எல்லாத்தையும் ஒரே இடத்தில கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சது' என்றார் பெருமையோடு...

தனக்கு ஓவியத்தில் புதுப்புது முறைகளைப் பயிற்றுவித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த விரிவுரையாளரும் சிற்பியுமான அல்லிராஜாவை இந்த இடத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் உயிருள்ள பொருட்களை வரைவது தடைசெய்யப்பட்டதாக இருக்கும்போது நீங்கள் எவ்வாறு இவற்றை வரைகின்றீர்கள்....
'உண்மைதான். ஓவியம் வரைவதற்கு இஸ்லாத்தில் தடையில்லை. நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் என் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க நான் எல்லாம் வரைய தெரிந்திருக்கத்தானே வேண்டும்.. அவ்வாறான ஓவியங்களை வரைந்து வீடுகளில் தொங்கப்போடுவதற்கு தடை உண்டுதான். அதனால் நான் அவற்றை வரைந்து எங்காவது மூடி வைத்துவிடுவேன்' என்றார் சிறிய வருத்தத்துடன்.

நம் நாட்டைப் பொறுத்தளவில் ஓவியம் வரைந்து காலத்தை ஓட்டலாமா?
'மேலை நாட்டைப் பொறுத்தவரையில் சித்திரத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கு. ஆனால் அந்தளவிற்கு நம்மட நாட்டில இல்லை. ஒவ்வொரு கலைஞரும் தான் வரைந்த ஓவியங்களை விற்பதற்கு சுதந்திரமுண்டு. கலைஞர்கள் என்றாலே வறுமைப்பட்டவர்களாத்தான் இருப்பாங்க. அது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவங்க வாழ்வின் பெரும்பாலான பகுதிகள வந்து ஓவியம் வரையிடுறதிலையே செலவிடுறதால அவங்கட குடும்ப நிலமையும் கஸ்டத்தில் இருக்கும். ஆனால் அத்தகை ஓவியங்களை வாங்குவது மிகவும் குறைவே...' என்றார்.
ஒரு கருத்துள்ள ஓவியத்தை ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்குரிய விதத்தில்புரிந்து கொள்வர். ஒரு சிலருக்கு கோடுகளாகவும் சில வண்ணச் சிதறல்களாகவும் தெரியும் அதே சித்திரம் பிறிதொருவருக்கு ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்கலாம். இதுதான் சித்திரக்கலையின் சிறப்பு. இது ஒவ்வொருவின் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடும்.
நீங்கள் ஒரு ஓவிய ஆசிரியர் என்றவகையில் மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்துகின்றனர? அதில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ன?
எந்தவொரு துறைய எடுத்துக்கொண்டாலும் அதில ஆர்வமும் அதை மதிக்கிற தன்மையும் இருக்க வேண்டும். ஆர்வமிருந்தால் செய்ய முடியாதது உலகத்தில எதுவும் இல்ல. சில பெற்றோர் என்னிடம் சித்திரம் கீறித் தருமாற வருவாங்க. நானும் கீறிக் கொடுப்பன். மறுநாள் வகுப்பில் வந்து பார்த்தால் நான் கீறின சித்திரத்தையே என்கிட்ட மாணவர்கள் தாங்கள் வரைந்ததாக காட்டுவாங்க. அதுக்கு பிறகு கீறிக் கொடுக்கிறத விட்டுட்டன். ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகள்தாள் கீறுகிறார்கள் எண்டு நினைப்பாங்க. ஆனால் பெற்றோர்கள் மற்றாக்கள்ட கொடுத்து கீறி கொடுக்கிறதுலா எந்தப் பயனும் இல்ல. அவர்ள் கீறிப் பழக பழகத்தானே ஒரு பயிற்சியாக அமையும்?' என்றவர் சுனாமி அனர்த்தத்தின் போது தான் வரைந்த நிறைய ஓவியங்கள் அழிந்துவிட்டதாக கூறி வருந்தினார்.

யாருடைய ஓவியம் உங்களுக்குப் பிடிக்கும்?
நான் வந்து அதிகமாக வின்ஸன்ட் வான்கோ வின் ஓவியங்களைத்தான் அதிகமா விரும்புவது. இவருடைய ஓவியங்கள் மற்றவர்களுடைய ஓவியத்தை விட வித்தியாசமாக இருக்கும். உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிக்காட்டும் இந்த ஓவியங்கள் பல்வேறுபட்ட மக்களுடைய வாழ்வியல் அம்சங்களைச் சித்தரிக்கிறன.

இன்ற நம்நாட்டில் ஒவியக்கலை குறிப்பிட்ட சொல்லக்கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை. இதனை ஊக்குவிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்று கேட்டபோது....
'இலங்கையில சித்திரக்கலை பயில்வதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. சித்திரத்திற்குரிய மூலாதாரங்கள் இல்லை. இப்ப எல்லாமே செலவு அதிகரித்து போகுது. பாடசாலையில கூட வந்து எல்லாப் பிள்ளைகளாலையும் சித்திரம் கீறுவதற்கு தேவையானத பெற்றுக்கொள்வது கஸ்டமாகத் தான் இருக்குது. சித்திரத்துக்குரிய வரலாறுகூட தமிழில் வருவது குறைவு. சிங்களத்தில்தான் வந்திருக்கு. இந்தியா போன்ற நாடுகளில் அதுக்குரிய வரவேற்புகள் கூடுதலாக இருக்கு. எங்களுக்கு தேவையான பத்தகங்களைக்கூட இந்தியாவில்தான் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கு. ஆகவே நம்ம நாட்டிலயும் அதற்கான வழிவகைகளை செய்துகொடுக்க வேண்டும். அத்தோடு இப்போதைய பிள்ளைகளை சித்திரம் கீறுவதில் ஆர்வம் காட்டி தங்கள் கீறும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நம்நாட்டிலும் வருங்காலத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். எங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு ஏதாவது சாதிக்க முயலவேண்டும். எம்மிடம் எத்தனை கலைகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதற்குரிய அங்கீகாத்தைப் பெற்றுக்கொள்ளுவதுதான் மிக அவசியம். நான் முன்பு வரைந்த ஓவியங்களுக்கு இப்ப நானொரு ஓவிய ஆசிரியரான பிறகுதான மதிப்பே கிடைச்சிருக்கு. நம்மட சமூகத்தில ஒரு பிரபல்யமான அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஏதாவது செய்யும் போதுதான் அதுக்கு மதிப்பு தாறாங்க. ஆகவே இன்று கலைஞனுக்கு ஒரு அங்கீகாரமும் தேவையாக இருக்கிறது' என்றார்.

உங்கள் ஓவியங்கள் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
'பொதுவாக நான் ஓவியம் வரைவதே என் மனதை ஏதாவது அதிகமாக தாக்கும் சந்தர்ப்பங்களில்தான். அந்த நேரத்தில் ஏற்படுகின்ற உணர்வுகளை ஓவியமா வரைவதால் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். அது என் ஒவியத்தைப் பார்க்கும் மக்களுக்கும் ஏற்படவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. பல்வேறு பிரச்சினைகளைக் குறித்த எனது படைப்புகள் மொழி, இனம், நிறம் கடந்து பல்வேறு தரப்பையும் சிந்திக்க வைத்துள்ளன. ஒரு படைப்பாளனாக நான் படைத்த பல்வேறு ஓவியங்கள் என் ஆத்ம வேதனைகளை அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. இன்று நமக்குள் நாமே அழுதுகொண்டு அதற்கு மருந்தையும் நாமே போட்டுக்கொள்கின்றோம். தொடரும் இந்த வலி மிகுந்த வேதனைகளை என் ஓவியங்களில் காட்டியுள்ளேன். இன்றைக்கு கையறு நிலையில் இருக்கும் தமிழினத்தின் அவலத்தை இவ்வாறான ஓவியங்கள் மூலம் உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது' என்றார் வயதுக்கே உரிய துடிப்புடன்.

போராட்டம் பற்றிய புரிதலை உலக அளவில் கொண்டு சேர்க்கவேண்டிய விடயத்தில் தமிழர்களும் தவறு செய்திருக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான முழு வலிமையும் ஓவியத்துக்கு இருக்கின்றது என்பதை மறந்துவிட்டார்கள். பொதுவாக எமது மக்கள் ஓவியங்கள் எனும் போது அது அழகாக இருக்கவேண்டுமென்றே நினைக்கின்றார்கள். அதற்குள் புதைந்துள்ள உணர்வுகளை அந்தக் கண்னோட்டத்தில் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இத்தகைய வலிமைமிகு ஓவியத்தை அழகாக எமது வாழ்வியலோடு மக்கள் பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி வரையும்போது நிச்சயம் அதன் பலனை அனுபவிக்கலாம். ஆகவே அதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமன்றி அதற்குத் தேவையான வளங்களையும் எமது நாட்டிலேயே ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

இருக்கிறம்: 23.05.2011

No comments: