Monday, May 30, 2011

'வசூல்' வேட்டையில் இணையத்தள வானொலிகள்


'நீங்களும் அறிவிப்பாளராகலாம்', நேரடியாக எமது கலையகத்தில் பணியாற்றலாம்', 'பிரபல ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு| இப்படிப் பலவாறான விளம்பரங்களை அன்றாடம் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். சிலர் வரிந்து கட்டிக்கொண்டு விண்ணப்பங்களை நிரப்பிப் போட்டுமிருப்பீர்கள். சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய் கையில் இருப்பதை விற்றுப் பணமாக்கி அவர்கள் கேட்கும் தொகையை அனுப்பிவிட்டு ஏமாந்த சோனகிரிகளாக இருப்பீர்கள்.

அவ்வாறு ஓடி ஏமாற்றமடைந்தவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொள்ளலாம். நானும் இவ்வாறு பத்திரிகை விளம்பரமொன்றைப் பார்த்துவிட்டு ஒரு இணைய வானொலிக்கு நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். குரலைப் பரீட்சித்துவிட்டு ஷநீங்கள் இந்த வானொலியில் பணியாற்றலாம். ஆனால், இதற்கான பயிற்சிநெறிக்காக நீங்கள் 10 ஆயிரம் ரூபா கட்ட வேண்டும்| என்று கேட்டனர். ஆர்வக்கோளாறு காரணமாக நானும் கட்டணத்தை செலுத்தி இணைந்துகொண்டேன். விடுமுறை நாட்களில் வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களால் ஊடகவியல் தொடர்பான சில வகுப்புகள் நடத்தப்பட்டன.

அறிவிப்பாளராக பணிபுரியலாம் என்று அறிவித்து விட்டு இப்படி பயிற்சி நெறியை மட்டும் நடத்துகிறீர்களே என்று நான் கேட்டபோது பயிற்சிநெறியை நடத்தியவர் கூறினார் 'தம்பி பயிற்சிநெறி முடிவடைந்ததும் திறமையானவர்களை (ரொம்பவும் ஆர்வக் கோளாறு உள்ளவர்களை) நாங்கள் அறிவிப்பாளர்களாக இணைத்துக்கொள்வோம்' என்று. நான் அப்படிக் கேட்டதாலோ என்னவோ ஒருவாறு அறிவிப்பாளராக மூன்று மாதங்கள் இரவு, பகல் பாராது ஐந்து சதம்கூட சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன். அந்த வானொலியில் பிரதான முகாமையாளராம் அவர். அறையை விட்டு வெளியே வரமாட்டார். அவரிடம் போய் கேட்டபோது ஷஇப்போது சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய யூனிவர்சிற்றில, மற்றும் ஊடகத்தில் ஆர்வமுள்ளவர்கள் பலர் முன்வருகின்றனர். அப்போ, நாங்கள் சம்பளம் கொடுத்து அறிவிப்பாளர்களை வைக்கவேண்டிய தேவையில்லையே| என்றாரே பாருங்கள். 10,000 காசை என்னிடமிருந்து கைநீட்டி வாங்கும் போது அத்தனைப் பற்களையும் காட்டி இளித்தவர் அன்று என்னிடம் கடுகடுத்தார். என்னசெய்ய அவர்களிடம் வாதாடி நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று அறிந்துகொண்ட நான் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அறிவிப்பாளர் ஆகவேண்டுமாயின் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்ற நம் ஆர்வக்கோளாரை நன்கு அறிந்துகொண்ட இவ்வாறான நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி நன்றாகவே பணம் உழைக்க ஆரம்பித்துவிட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இவ்வாறான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். அங்குள்ள என் நண்பர் ஷஅவங்க வேலைக்கு எண்டு பேப்பர்ல கோல் பண்ணிட்டு, இன்டர்வியூவுக்குப் போனதும் கோர்ஸ் எண்டு சொல்றாங்க. கோர்ஸ் எண்டா ஆரும் அப்ளை பண்ண மாட்டாங்க. நானும் போயிருக்கவே மாட்டன். பொறகு 10 ஆயிரத்த வாங்கிட்டு ஒழுங்கா கிளாஸும் வெக்கிறதில்லை. சும்மா ஆசை காட்டி இப்படி எமாத்துறாங்க. பொறகு நாங்க உங்களுக்கு அந்த றேடியோவுக்கு, இந்த றேடியோவுக்கு வேலை எடுத்து தருவம் எண்டு பொய்யச் சொல்லி ஏமாத்திட்டாங்க. இதை உங்க பேப்பர்ல போட்டா புண்ணியமா போவும். எத்தனையோ பேர் இப்படி ஏமாறுறாங்க' என்றார் அழாக்குறையோடு...

இருந்தும் பல இளவட்டங்கள் அறிவிப்பாளராகும் எண்ணத்தில் அவ்வாறான நிறுவனங்களில் நாளுக்கு நாள் படித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பிரபல ஊடகங்களில் பணியாற்றுபவர்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தாங்கள்தான் வேலை எடுத்துக்கொடுத்தோம் என்று பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் தேடிப் பார்க்கையில் அங்கே அப்படி ஒரு மண்ணும் இல்லை என்று என் ஒலிபரப்புத்துறை நண்பர் ஒருவர் கூறக் கேட்டேன். 'எங்கட முயற்சியாலதான் நாங்க வேலக்கி வந்தம். அவங்கட ரெகமண்ட் எல்லாம் இங்க எடுபடாது. ஒரு சேர்ட்;டிபிக்கேட்ட கையில் குடுத்து கைகழுவிட்டாங்க. இப்ப எங்களக் காட்டி பொழப்பு நடத்துறாங்க| என்று ஆதங்கப்பட்டார்.

சுற்றிச் சுற்றிப் பார்க்கும்போது நிறைய பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனது நண்பி ஒருவரும் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கின்றார். 'சூப்பர் ஸ்டார்| இன் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்ட ஒருவர் தனக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 12 ஆயிரத்துக்கு ஷஆட்டையைப்| போட்டதாகத் தெரிவித்தார். அந்த மோசடிப் பேர்வழி வீட்டுக்கே வந்து நண்பியின் பெற்றொரின் முன்னிலையில் பணத்தை பவ்வியமாக பெற்று அதுக்கு ஒரு ரசீதும் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். பிறகு அவரை தொடர்புகொள்ளமுடியாமலேயே போய்விட்டதாம். கொடுத்த பற்றுச்சீடடை வைத்து குறிப்பிட்ட இடத்துக்கு போய் பார்க்க அந்த இடமும் காலிசெய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஒரு இணையத்தள வானொலியொன்று தனது கிளையை நிறுவி, ஒரு பண்டிகை தினத்தன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 96.1 (நடமாடும்) அலைவரிசையை எடுத்து இரு தினங்களுக்கு நிகழ்ச்சிகளை நடாத்தி கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கின்றது. அந்த இணையத்தள வானொலியில் பயிற்சிக்காக வந்தவர்களிடம் விளம்பரங்களை சேகரித்துவருமாறு பணித்தனர். அதில் ஒரு சில யுவதிகள் தங்களால் விளம்பரம் எடுக்க முடியாமல் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் அங்கு பயிற்சிபெற்ற பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் தெரிவித்தார்.

இணையத்தள வானொலிகள் சில ஷவேலை தருகிறோம்| என்று விளம்பரம் செய்துவிட்டு ஷகோர்ஸ்| என்று அடிப்படையில் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பணத்தையும் வீணடித்து வருகின்றன. இது தொடர்பாக ஷவாரணம் எப்.எம். முகாமைத்துவப் பணிப்பாளர் குணசீலனுடன் நான் தொடர்புகொண்டு கேட்டபோதுளூ ஷநாங்க அப்படியெல்லாம் பேப்பர்ல விளம்பரம் போடுறதுல்ல. ஆனா, நெறயப் பேருக்கு வேல எடுத்துக் குடுத்திருக்கம். திறைமயானவங்க எங்களிட்ட இருந்தா நாங்க கட்டாயம் அடையாளப்படுத்துவோம்| அப்படி எங்களது முயற்சியால் சிலருக்கு பிரபல ஊடக நிறுனவங்களில் வேலை எடுத்துக் கொடுத்திருக்கிறம்' என்று பட்டியலிட்டுக் காட்டினார். இன்று எல்லா வானொலிகளுமே வர்த்தக நோக்கத்தை மையமாக வைத்தே இயங்குகின்றன. அதற்குள் நடக்கும் குத்து வெட்டுக்கள் பற்றி பேசவேண்டாமே... பிறகு ஊடக நாகரிகத்தை நாங்கள் மீறிவிட்டதாகவேறு குற்றஞ்சாட்டுவார்கள்.

இந்த இணையத்தள வானொலிகள் பற்றி நாம் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்கள் 'சிலோன் தமிழ நாங்க காது குளிரக் கேட்கணும்| என்று சொல்லி இணையத்தள வானொலிகளை ஆரம்பிப்பதற்கான சகல வசதிகளையும் செய்துகொடுத்தனர். ஆனால் இதுவே இன்று பணம் கறக்கும் ஒரு உத்தியாக மாறிவிட்டது.
இன்று பிரபல வானொலிகளில் அறிவிப்பாளராக இருப்பவர்கள் கூட இந்த விளையாட்டைக் காட்டுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? அவர்களிடம்தான் இவர்கள் அதிகமாக ஏமாறுவார்கள். என் நண்பர் ஒருவர் என்னிடமே கேட்டார் 'நான் Media Course நடத்துறன.; எனக்கு ஆள் எடுத்து தா,. எனக்கு ஒரு இணையத்தள வானொலியும் இருக்கு' என்று. 'நீங்கள்தான் இன்று நல்ல வானொலியில் பெயர்பெற்ற அறிவிப்பாளராக இருக்கின்றீர்களே.. பிறகேன் இணையத்தள வானொலி' என்று... தனக்கென்று ஒன்று இருக்கவேண்டுமாம். அவர் கூறிய ஒரு விடயம் என்னை ஆட வைத்துவிட்டது. அதாவது அவர் வழங்கும் சான்றிதழில் சகல ஊடகங்களிலும் இருக்கும் மேலதிகாரிகள்; ஒரு அரசியல்வாதி என்று கையெழுத்திடுவார்களாம். ஏன் என்றேன். 'எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும். அதற்குதான். இப்படி' என்றார். விடுவார்களா நம் இளைஞர்கள்? தற்போது அவருடைய Media Courseக்கு அதிகமானோர் படையெடுப்பதாகக் கேள்விப்பட்டேன்.

இது தொடர்பாக சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது...
'இணையதளத்தின்; தமக்கு தெரிந்தவற்றைக் கொண்டு பயிற்றுவித்து அறிவிப்பாளர் வடிவத்தை பெற்றுத்தருகின்றோம் என்று கூறும் பல்வேறு தரப்பினரை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு அரச வானொலியில அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணத்திலே வருபவர்களை சிலநேரம் இதழியல் என்று சொல்வார்களே அதில் அங்கத்துவம் வகிக்கின்ற படிவத்துடன் நான் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். 'ஆறாயிரம் கொடுத்தோம் எண்ணாயிரம் கொடுத்தோம் வேண்டுமானவற்றை சொல்லிக்கொடுத்தார்கள். எங்களுக்கு உரிய இடங்கிடைக்கவில்லை' என்று அங்கலாய்ப்பதை நான் நேரடியாகக் கேட்டிருக்கின்றேன். அவர்களுக்கொல்லாம் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இத்துறையிலே பண்பட்டவர்கள் உங்களுக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தால் இந்தத்துறையில் நீங்கள் முன்னேறிச் செல்லலாம். அதற்காக இப்போது பயிற்சியளிப்பவர்களை திறமையற்றவர்கள் என்று சொல்லவில்லை. நாம் ஒருவருக்கு பயிற்சியைக் கொடுக்கும்போது நாம் அதிலே ஆழ்ந்த சிந்தனை உடையவர்களாக மாத்திரமல்லாமல் அதிலே முழுமையாக எங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதிலே சற்றுப் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். பணம் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்திலே இத்தகைய பணிகளில் ஈடுபட்டால் ஆர்வத்தோடு இத்துறைக்கு வரும் இளையதலைமுறை அறிவிப்பாளர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் இல்லாமல் போய்விடும். முதலில் உங்களுடைய தமிழைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அந்தத் தமிழைக் காப்பாற்றக்கூடிய பணியினை உங்களுக்கு பயிற்சி தருபவர்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

இவர் கூறியதைப்போல பணத்தை மட்டும் இலக்கு வைத்து அறிவிப்பாளர் பாடம் நடத்துவோரிடம் நாம்தான் நிதானமாக இருக்கவேண்டும். அறிவிப்பாளர் ஆகியே தீரவேண்டும் என்றால் இவரைப்போல எத்தனையோ மூத்த அறிவிப்பாளர்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள் அவர்களிடம் சென்று அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உங்கள் ஆர்வக் கோளாறுக்கு வழிதேடலாமே. தயவுசெய்து ஊடக மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள்.

இல்லை. நீங்களும் இணையத்தள வானொலி ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு உங்களை விட்டுப்போகாவிட்டால் இந்த http://www.youtube.com/watch?v=EDm8JkcmA84&feature=player_embedded முகவரிக்குச் சென்று எவ்வாறு இலவசமாக இணையத்தள வானொலிகள் ஆரம்பிக்கலாம் என்ற வீடியோக் காட்‌சியைப் பார்த்துவிட்டு நீங்களும் இலவசமாக ஒரு இணைத்தள வானொலிக்கு சொந்தக்காரர்களாகலாம். இதிலும் தனியாக இணைய வானொலி செய்யலாம். http://www.ustream.tv/discovery/live/all

No comments: