Saturday, April 16, 2011

facebook சமூக மாற்றமா? சமூக சீரழிவா?



-முஹம்மட் பிறவ்ஸ்-


ஆரம்ப காலங்களில் பத்திரிகைகளில் வெளிவந்த `பேனா நண்பர்கள்’ பகுதியே நண்பர்களின் இணைப்புப் பாலமாக இருந்தது. அந்த காலம் மலையேறி பின் கையடக்க தொலைபேசி, இணையத்தள அரட்டை (Chatting) என முன்னேறி இன்று பேஸ்புக், நட்பு வட்டாரங்களுக்கிடையில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. உலகில் தற்போது 20 கோடிக்கு மேலான பாவனையாளர்கள் பேஸ்புக்கில் உள்ளனர். Mail ID இருக்கின்றதா என்று கேட்பதை விடுத்து இன்று பேஸ்புக் கணக்கு இருக்கின்றதா என கேட்கும் அளவுக்கு உலகம் மாறிவிட்டது.

எந்த ஒரு விடயத்திலும் நன்மை தீமைகள் இருக்கத்தான் செய்யும். பேஸ்புக் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த பேஸ்புக் மூலம் பல சமூகப் பிரச்சினைகள் இடம்பெறுவதாகக் கூறி சென்ற மார்ச் மாதம் பேஸ்புக் சேவை நிறுத்தப்படப் போவதாகச் செய்திகள் வெளியாகின. அதன் பின் பேஸ்புக் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. புகைப்படங்களை Save பண்ணுவது, அதிகப்படியான நட்புக்கோரிக்கைகளை விடுப்பது (Friend Request) என்பன தடைசெய்யப்பட்டிருந்தன.

இணையப் பின்தொடரல்கள் தொடர்பாக அண்மையில் பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழக உளவியல் நிபுணர் டொக்டர் எம்மா ஷோர்ட் ஆய்வொன்றை நடாத்தியுள்ளார். இதன் முடிவுகளின்படி இணையக்காதலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இளம் வயது பெண்கள் தங்கள் கற்பையே இழந்த கதைகளை நாம் அன்றாட ஊடகங்களில் அறிந்துள்ளோம். தற்போது பேஸ்புக்கில் அகற்றப்பட்ட 4 இஸ்லாமியப் பக்கங்களை மீண்டும் கொண்டுவராது விட்டால் 2.5 மில்லியன் முஸ்லிம் பாவனையாளர்கள் அதிலிருந்து விலகிவிடப்போவதாக எச்சரிக்கை வேறு விடுத்துள்ளனர்.

நட்பு காதலாக மாறுவதற்கு பேஸ்புக் முதற் காரணியாக இருப்பதாக மேலும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேஸ்புக்கில் அழகான முகங்களைக் கண்டால் நட்புக்கான கோரிக்கையை விடுத்து (கசநைனே சநளூரநளவ) முதலில் நண்பர்களாக இணைந்து கொள்கின்றனர். இது பல விபரீதங்களுக்கு வித்திடுகின்றது. அதிகமானோர் தங்கள் உண்மையான தகவலை தருவதில்லை. இவர்களிடம்தான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். வெளிநாடொன்றில் இருவர் பொய் பெயர்களில் கணக்கு வைத்து அவர்களது நட்பு காதலாகி கசிந்து நேரில் சந்திக்கும்போது மூக்குடைப்பட்ட சம்பவம் நாம் அறிந்ததே. காரணம் சந்தித்துக்கோண்ட இருவரும் தந்தையும் மகளும். இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்வது....

இலங்கையிலும் பேஸ்புக் தொடர்பாக கடந்த மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலங்கை மகளிர், சிறுவர்களுக்கான அமைப்பு பே°புக் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதில் பணமோசடி, பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல் என்பனவே அதிகளவாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான கணக்குகளை வைத்திருப்பவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.



இப்படியான பல சமூக சீர்கேடான விடயங்கள் அன்றாடம் நடந்தேறினாலும் இதில் நன்மைகளும் இல்லாமலில்லை. பல வருடங்களாக காணாமல் போன தந்தையும் மகளும் இணைந்துகொண்டது இந்த பேஸ்புக்கில்தான். அத்தோடு விடுபட்டு போன சொந்தங்கள், உறவுகள் பல மீண்டும் இந்த பேஸ்புக்கின் மூலம் இணைந்துள்ளன. அத்தோடு வெளிநாடுகளில் உள்ளவர்களோடு தொலைபேசியில் உரையாடுவதற்கு கட்டணம் அதிகம் என்றபடியால் அது பலருக்கு சாத்தியமாகாது. அவ்வாறானவர்களுக்கு பேஸ்புக் ஒரு வரப்பிரசாதமே. அத்தோடு உடனடி தகவல் பறிமாற்ற ஊடகமாக பேஸ்புக்கை எடுத்துக்கொள்ளலாம். நாம் மறந்துபோனாலும் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணநாட்களை எமக்கு ஞாபகப்படுத்தி உதவுகிறது.

அத்தோடு பேஸ்புக்கில் பார்ம்வில்லே (FarmVille) விளையாடி ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டமொன்று அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விளையாட்டுகளில் நீங்கள் வாங்கும் கற்பனைப் பொருட்களுக்கு இணையான தொகையை, பேஸ்புக் விளையாட்டுகளை உருவாக்கிய சிங்கா (Zynga) நிறுவனம் உதவிப்பணமாக வழங்கும்.

பேஸ்புக் தொடர்பு என்பது கத்தி மீது நடப்பது போன்றது என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். நமக்கு நன்கு பரீட்சயமான நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் எமது நட்பு பட்டியலில் இணைத்துக்கொள்வது சிறந்தது. நமக்கான ஆபத்தை நாமே விலை கொடுத்து வாங்காமல் வருமுன் காப்பதே சாலச்சிறந்தது.





நன்றி: இருக்கிறம் 11.04.2011

No comments: