Friday, November 20, 2009

இயற்கையின் அபிநயம்! (சக்தி FM - இதயராகம்)


மொட்டை மாடிகள் காத்துக் கிடக்கின்றன...
வெட்டைவெளிகள் சிலிர்த்துக் கிடக்கின்றன...
பூக்கம்புகள் துருத்தி நிற்கின்றன...
வயல் வெளிகள் கம்பளம் விரித்து
வரவேற்புக்காக ஏங்கி நிற்கின்றது...

சில் வண்டுகள் அடிக்கடி சிணுங்குகின்றன...
தூக்கணாங் குருவிகள் ஊஞ்சலாடுகின்றன..
ஊசி மழைக் காட்டுக்குள்ளே
ஊர்ப்பட்ட குருவிகள் கீச்சிடுகின்றன...

மென்மையின் முரட்டுத்தனத்தால்
மேகங்கள் முட்டிக் கொள்கின்றன
கூத்தாடிகள் குறுக்கிட்டு
சூடேற்றி பறை சாற்றுகின்றனர்.
குட்டிக் குழந்தைகள் மட்டும் அழுகின்றன.

தொப்பி கழன்ற காளான்களும்
சுளுக் கெடுத்த நண்டுகளும்
வன்முறை செய்யும் ஆமைகளும்
ஆத்தோரம் அம்சமாக இருக்கின்றன.

மலையை வலை போட்ட தேயிலையும்
அணிவகுப்பு மரியாதை செய்யும் இறப்பரும்
கொள்ளை கொள்ளும்
தண்ணீர் சலவைகளும் கொள்ளை அழகு..
- ஏ.ஜே.எம். பிறவ்ஸ்

Friday, November 13, 2009

விரக்தியின் விளிம்பில்...!


வடக்கில் இருந்தேன் யுத்தம்...
கிழக்கில் இருந்தேன் சுனாமி...
மேற்கில் இருந்தேன் கெடுபிடி.....
தெற்கில் இருந்தேன் அராஜகம்...
மத்தியில் இருந்தேன் மண்சரிவு....
வீட்டில் இருந்தேன் சண்டை....
வீதியில் வந்தேன் கலவரம்...
நாட்டில் இருப்பதும் குற்றம்...
காட்டில் இருப்பதும் குற்றம்...
இனி, செவ்வாய் கிரகம் போவதாக முடிவு!
சீ.. சீ.. அங்கும் மனிதர்கள் போய் விடுவார்கள்...
எனக்கு நிம்மதியை தருகின்ற ஒரே இடம்
எனது கல்லறைதான்...
அங்கு வந்தும் என் மேல்
சமாதியை கட்டி விடாதீர்கள்...
நான் நிம்மதியாக சுவாசிக்க வேண்டும்...

Friday, August 14, 2009

கவிதை


இயற்கையும் எண்ணங்களும்

இதயத்தில் பிறந்து
மூளையில் விருத்தி அடைந்து
பேனா முனையின் ஊடாக
பேபரில் பிரசவிக்கும் மழலைகள்

Sunday, June 28, 2009

உறங்காத ராத்திரிகள்! - தினகரன் வாரமஞ்சரி (செந்தூரம்)



நாட்குறிப்பேட்டிலிருந்து....! - சக்தி FM (இதய ராகம்)



குழந்தையில் கிறுக்கிய சிலேட்டும்....
குச்சி பிடித்து எழுதிய மணல் மேடும்...
குறும்புகள் பல செய்த கிடுகு வேலியும்...
கிட்டிப்புள் விளையாடிய மூங்கிலும்...
நீங்காத நினைவுகளாக...!

ஓணான் பிடித்த ஈர்க்கிலும்...
குருணலில் ஆக்கிய குஞ்சி சோறும்...
கயிறுகட்டி ஓடிய சிக்குபுக்கு ரயிலும் ...
பொறுக்கித் திண்ட ஆலக்காய்களும்...
நீங்காத நினைவுகளாக...!

கடற்கரையில் மணல் வீடு கட்டியதும்...
சிறுமணலில் நண்டு துரத்திப் பிடித்ததும்...
தும்பி பிடித்து நூலில் கட்டி விட்டதும்...
நீங்காத நினைவுகளாக...!
என்றும் பசுமையோடு - எனது
நாட்குறிப்பேட்டில்....!