Saturday, August 13, 2011

வாழைச்சேனையில் மர்ம மனிதன் கைது

வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு புகையிரத நிலையத்தில் நடமாடிய ஒருவரை 'மர்ம மனிதன்' என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அடையாளம் காட்டியதனை அடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.


இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் - இராணுவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இராணுவத்தினர் அவரை அனுப்ப முற்பட்டபோது மக்கள் ஆத்திரமடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடி புகையிரதத்தை மறித்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்தவரென தன்னை அடையாளப்படுத்திய குறித்த சந்தேகநபர் - தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் வெலிக்கந்தைக்குச் செல்வதற்கு பயணச் சீட்டு எடுத்ததை அடுத்து மேலும் குழப்பமடைந்த பொதுமக்கள் - சித்தாண்டி இராணுவ படை பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் என்பதால் பொதுமக்களிடமிருந்து குறித்த சந்தேகநபரை பாதுகாக்கவும் மேலதிக விசாரணை மேற்கொள்ளவென கூறி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் சிறு பதற்றநிலை ஏற்பட்டது.